பாஜகவின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான விஜயராஜ சிந்தியாவின் வாரிசுகள் இன்றுவரை ராஜஸ்தான் அரசியலிலும், மத்தியிலும் ஆக்கிரமித்து வருகின்றனர். இந்த வாரிசைத் தவிர, முன்னாள் முதல்வர்கள் கல்யாண் சிங், ராஜ்நாத் சிங், பிரேம்குமார் தூமல், சிவ்ராஜ் சிங் சௌஹான், எடியூரப்பா, பசவராஜ் பொம்மை, வீரேந்திர சக்லேச்சா. ரமண் சிங் ஆகியோரின் வாரிசுகள் பாஜகவில் குறிப்பிடத்தக்க அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர். அதுபோல் தேவேந்திர பட்னாவிஸ், யோகி ஆதித்யநாத், பெமா காண்டு ஆகியோரின் குடும்ப வாரிசுகளும் பாஜகவில் கோலோச்சி வருகின்றனர்.
மேலும், பியூஷ் கோயல், கிரண் ரிஜிஜூ, பூனம் மகாஜன், பங்கஜ் சிங், ப்ரீத்தம் முண்டே, விவேக் தாகூர், பன்சூரி ஸ்வராஜ் ஆகியோரும் குடும்ப அரசியல் வாரிசுகளே. அதுபோல் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சகோதர வாரிசுகளும் அரசியலில் இடம்பிடித்துள்ளனர். இப்படி, பாஜகவின் அரசியல் வாரிசுகளின் பட்டியலை இதர கட்சிகள் வெளியிட்டு, அக்கட்சியின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்து வருகின்றன.
ஏன் விமர்சனங்கள் எழுகிறது?
வாரிசு, குடும்ப அரசியலை பொறுத்தவரை ஏன் இவ்வளவு விமர்சனங்கள் எழுகிறது என்றால் கட்சியில் உழைத்த பலர் இருக்க ரத்த வாரிசு என்பதாலே முக்கிய பொறுப்புகள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பும் பலருக்கு கிடைக்கிறது என்பதே இந்த விமர்சனங்களுக்கு முக்கிய காரணம். ஒரு குடும்பத்தில் இருந்து பலரும் கட்சியில் இணைந்து பணியாற்றுவது என்பது இயல்பான ஒன்றுதான். அதனை தவறு என்று சொல்ல முடியாது. ஆனால், முன்னுரிமை யாருக்கு அளிக்கப்படுகிறது என்பதை பொறுத்து தான் வாரிசு, குடும்ப அரசியல் விமர்சனங்கள் எழுகின்றன.
மொத்தத்தில் ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் அரசியல் வாரிசுகள் அதிகரிக்கத் தொடங்கி விட்டனர் என்பதே உண்மை.
