
விஜய் பேசியது என்ன?
கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்த த.வெ.க.தலைவர் விஜய், அவர்களை மாமல்லபுரம் வரவழைத்ததற்காக மன்னிப்புக்கேட்டதுடன், கண்ணீர் மல்க ஆறுதல் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். கரூருக்கு நேரில் வந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு விஜய் ஆறுதல் கூற திட்டமிட்டிருந்ததாக கூறப்படும் நிலையில், பல்வேறு காரணங்களால் அம்முடிவு கைவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை பேருந்துகள் மூலம் நேரில் வரவழைத்த விஜய், மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாய்ன்ட் ஃபை ஷெரட்டன் ஹோட்டலில் வைத்து சந்தித்தார்.
ஒவ்வொரு குடும்பத்தினரையும் தனித்தனியாக சந்தித்து அவர்களுடைய கோரிக்கைகளை விஜய் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களின் புகைப்படங்களை பார்த்து கண்கலங்கிய விஜய், ஈடு செய்ய முடியாத இழப்புக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை என்றும் அவர்களின் குடும்பங்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், ஆறுதல் தெரிவிப்பதற்காக கரூரில் இருந்து அழைத்து வந்த அனைத்து குடும்பத்தினரிடமும் விஜய் மன்னிப்புக்கேட்டதாகவும், மண்டபம் கிடைக்காததால் தான் கரூர் வர முடியவில்லை என்றும் அவர்களிடன் கூறியதாக சொல்லப்படுகிறது.
கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம் என என்ன தேவை இருந்தாலும் நிறைவேற்றி தருவதாகவும் அவர்களிடம் விஜய் உறுதி அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கண்டிப்பாக ஒரு நாள் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு வந்து குடும்பத்தினரை சந்திப்பேன் என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
